திருமணத்தில் அம்மி மிதித்து, அருந்ததி பார்ப்பது ஏன் தெரியுமா?

ஒவ்வொரு திருமணத்தின் போது அம்மி கல்லில் திருமணப் பெண்ணின் கால் வைத்து மாப்பிள்ளை மெட்டி போடுவதை பார்த்திருக்கிறோம்.

ஏன் அம்மி மிதித்து, அருந்ததி பார்க்கிறார்கள் என்று எல்லோரும் ஒரு கேள்வி வந்திருக்கும்.

அது ஏன் திருமணத்தில் செய்கிறார்கள் என்பது பற்றி இப்போது விரிவாக பார்ப்போம்:

இன்னார்க்கு இன்னார் என்ற தெய்வத்தின் கணக்கு வெளிப்படும் முக்கிய தருணம்தான் திருமண நிகழ்வு. இருமனங்கள் இணையும் திருமணத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக சம்பிரதயாங்களும், சடங்குகளும் நடைபெறும்.

இந்த மாதிரியான சம்பிரதாயங்கள் இந்து மதத்தில் கடைப்பிடிக்கப்படுகின்றன.

திருமணத்தின் போது செய்யும் ஒவ்வொரு சடங்கிலும் ஒரு அர்த்தம் இருக்கும். திருமணத்துக்கு முன்பு அரசாணிக்கால் நடுவதிலிருந்து திருமண சடங்கு நடக்க ஆரம்பிக்கும். திருமண நேரத்தில் கும்பம் (கங்கை போன்று தூய்மையான நீர்) ஹோமம் வளர்த்தல் (அக்னி சாட்சி) நவகிரகங்கள் வழிபாடு, தாரை வார்த்தல், திருமாங்கல்யம், அட்சதை, அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், தாலி கட்டுதல், மெட்டி அணிவித்தல் இப்படியான சடங்குகள் முறையாக மந்திரங்கள் முழங்க சுற்றமும் நட்பும் சூழ மங்களகரமாக திருமணம் நடைபெறும்.

மாப்பிள்ளையும், திருமணப் பெண்ணும் அக்னியை வலம் வரும்போது அவர்களது வலது பக்கத்தில் அம்மியை வைத்திருப்பார்கள். அந்த அம்மி மீது பெண்ணை காலை வைத்து அழுத்தச் சொல்வார்கள். இரும்பு கூட பாரம் தாங்காமல் வளைந்து விடும். ஆனால் கல் வளைந்துகொடுக்காது, மாறாக உடைந்து போகும் என்பதுதான் அதன் பொருள்.

கற்பு நெறி தவறாமல் வாழும் பெண் ஒரு போதும் அந்நிலையிலிருந்து பிறழ மாட்டேன். அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையைச் சந்திக்கும் போது கல் பிளவுப்படுவது போல நானும் உயிர் துறப்பேன் என்பதை உணர்த்தவே அம்மி மிதிக்கும் சடங்கு திருமண சடங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு வருகிறது.

பெண்கள் கற்பு கல்லைப்போன்று உறுதியாக இருக்க வேண்டும். அதை உணத்தும் வகையில் மணமகன் மணமகளின் காலை பிடித்து அம்மி மீது வைத்து மெட்டியை அணிவிப்பார்.

அதன் பின்னர் வானத்தை பார்த்து அருந்ததியை வணங்க சொல்வார்கள்.

அருந்ததி என்றால் கணவனின் சொல்லுக்கு குறுக்கே நிற்காதவள் என்று பொருள்.

வசிஷ்ட மகரிஷியின் மனைவி அருந்ததி. அவள் கற்பில் சிறந்தவள். அருந்ததி தெய்வத்தன்மையால் வசிஷ்டரும், அருந்ததியும் இணைந்து வானில் நட்சத்திரங்களாக மாறி விட்டார்கள். இருவரும் வாழ்வில் இணைப்பிரியாமல் வானில் நட்சத்திரங்களாக உள்ளார்கள். அதுபோல் திருமண வாழ்க்கையில் இருமனங்களும் இணை பிரியாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே மணமகன் மணமகளுக்கு அருந்ததி நட்சத்திரத்தைக் காட்டி அவள் போல் கற்பில் நீயும் சிறந்தவளாக இருக்க வேண்டும் என்று உணர்த்துவதாக அருந்ததி காட்டல் நிகச்சி சடங்கு நடத்தப்படுகிறது.

திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றும் வாழ்க்கையில் ஒவ்வொரு தத்துவத்தையும் உணர்த்துவதாகவே அமைக்கப்பட்டது. இத்தகைய சடங்குகளுக்கு உரிய நேரம் ஒதுக்கி அதைக் கடைப்பிடிக்கவும் செய்துவந்தார்கள். ஆனால் தற்போது மாறிவரும் நாகரிக சூழலில் திருமண நிகழ்வில் இத்தகைய சடங்குகள் குறைந்துவருகின்றன.

முன்னோர்களை மதித்து அவர்கள் காட்டிய சாஸ்திரங்களையும், சம்பிரதாயங்களையும் நாமும் கடைப்பிடிப்போம்…